Sunday, September 06, 2015

விடியாத வானம்
விடியாத வானம்
இருளோடா, ஒளியோடா?
பொழியாத கருமேகம்
மழையோடா, மனதோடா?
கால்வருடிய கடல்நுரையது
கடலோடா, கரையோடா?
என் உயர்கரைந்த நிமிடங்கள்,
நிஜத்தோடா,
நீ மறந்து விட்டுச்சென்ற
உன் நிழலோடா?

Thursday, July 31, 2008

இப்படியும் ஒரு இசை..

கடலே,
உலகக் கரையரங்குகளில் - யுகங்களாய்
உன் இசை நிகழ்ச்சி!!
கொஞம் சலித்துப்போய்,
உன்னைச் சதி மாற்றச் சொன்னதோ பூமி!
சுருதியேற்றி விட்டாய் சுனாமியாய்!!

Tuesday, July 29, 2008

காற்றே..

உயர்வென்றும் தாழ்வென்றும்
உணராமல் தோள் சேர்வாய்
உறவில்லை என்றாலும்
உள்சென்று உயிர் தருவாய்
உயிர் பிச்சை தந்தபோதும்
தற்பெருமை தவிர்த்துச் செல்வாய் - காற்றே
உடல் மட்டும் தழுவாமல் - சில
உள்ளங்களை கழுவிச் செல்!!

Sunday, July 27, 2008

வாழ்வில்..

வாழ்வில் இடர் வந்தால்
வருந்தாதே...
வானில் இருள் வந்தபிந்தான்
நான் கூட ஒளிர்கிறேன்..
-- இப்படிக்கு நட்சத்திரம்!

Sunday, December 26, 2004

பெண்ணை பிடிச்சுருக்கு..

அவள் தலைகுனிந்து சிரித்தாள்..
"பெண்ணை பிடிச்சுருக்கு" - சொல்லிவிட்டு
அனைவருடன் எழுந்து நடக்கையில்
நருக்கென்று குத்தியது....
பாதையின் முள்!
அதை தட்டிவிட்டு நடக்கையில்
ஆழமாய் பதிந்திருந்தது...
அவளின் சிரிப்பை விட
முள்ளானாலும்,
என் முதல் காதல்!!

Tuesday, November 30, 2004

மழை

கனக்கும் மனது கருமேகம்
வழியும் கண்ணீர் பொழியும் வருணண்
துடிக்கும் இதயம் இடிக்கும்
மின்னலாய் நினைவுகள்
உன் முகம் வந்து போகும் - ஒரு நொடி
என் அகம் வெந்து போகும்
எறும்பூற நிலம் தேயும் - உன்
நினைவூற உயிர் தேயும்
மழையில் நின்று வாடும் நிஜம் - அன்றும்
என் முன்னே நினைவுகள் குடை பிடித்துச் செல்லும்
விண்ணீர் கரைந்த மணல்
சகதியாய் சாலையோரம்...
கண்ணீர் கரைந்த கனவுகள் மட்டும்
அகதியாய்.......

Wednesday, November 03, 2004

காதலித்துப்பார்

காதலித்துப்பார்..
விழிக்கு இமை பாரமாகும்
விழித்திருக்கையில் விழித்திரையில்
கனவுகள் திரையிடப்படும்!
இதயத்துடிப்பு இசைத்தட்டாகும்..
ஆண்மை அர்த்தப்படும்
அதுவும் வெட்கப்படும்..
உன் பார்வை விழுந்து
கண்ணாடியும் கருத்தரிக்கும்!
உன் விருப்பப்படி
பிம்பஙளை பிரசவிக்கும்..
பாடல் வரிகள் தெளிவுபடும்
பாட வரிகள் எளிதில் தெளியாது!
முகப்பருக்கள் உன் முதல் எதிரி
அதற்கும் கேட்பாய் முதல் உதவி
உன் தனிமையை தாளித்து
கற்பனைச் சமயலுக்கு
சுவை கூட்டுவாய்..
சில இரவுகள் தண்டிக்கப்படும்
உறக்கம் துண்டிக்கப்படும்!
மலர்களின் வாசனை உணர்வாய்
தென்றலின் தீண்டல் நேசிப்பாய்
மதங்கள் வெறுப்பாய்
மனிதம் பிடிக்கும்
உன் நாளங்களுக்கு
உயிர்வலி உணர்த்துவாய்!
உன் மாற்றங்களை
மறைப்பதாய் நினைத்து
உலகிற்கு பரைசாற்றுவாய்
நிலவின் வன்மை ரசிப்பாய்
தீயின் மென்மை தீண்டுவாய்
அவளின்றி உலகம் அர்த்தப்படாது
அவளற்ற சொர்க்கம் ஆசைப்படாது!
இரவற்று பகலற்று
இயல்பற்று நகரும் நாட்கள்
செத்துப் பிழைக்கும் சக்தி
இயேசுவுக்கும் உனக்கும் மட்டும்!
காதலித்துப்பார்...
சத்தமில்லாமல் வாழ்ந்துவிட்டால்
சாவிலும் அமைதியில்லை...காதலித்துப்பார்!!